Monday, December 9, 2013

பூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்

நான்கு யுகங்களில் நான்காவது யுகமான கலியுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்;முதல் யுகமான கிருத யுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது; நம்மோடு இறைசக்தி வாழ்ந்து வந்தது;தர்மதேவதை என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருந்தன;அதர்மம் என்பதே இல்லை;
இரண்டாவது யுகமான திரோதாயும் 12,96,000 ஆண்டுகளை தனது ஆயுளாகக்கொண்டது; இந்த யுகத்தில் தர்மதேவதை என்ற பசுவுக்கு மூன்று கால்களாகக் குறைய அதர்மம் பூமியில் படர ஆரம்பித்தது;இறைசக்தி பூமியில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்பட்டது.

மூன்றாம் யுகமான துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டது;தர்மதேவதை இரண்டு கால்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது;இறை சக்தியை மிகவும் வருந்தி அழைத்தால் மட்டுமே வான் உலகில் இருந்து பூமிக்கு வந்தது;கோவில்கள் தோன்றின;அதர்மத்தின் ஆட்சிகள் உருவாகின;

நான்காம் யுகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகளை தனது ஆயுளாகக் கொண்டது;இதுவே நாம் வாழும் கலியுகம் ஆகும்.நாம் தற்போது கலியுகம் துவங்கி 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.பணம்,காமம் இந்த இரண்டின் வடிவில் அதர்மம் பூமியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.தர்மம் என்ற பசுவானது ஒற்றைக் காலில் நிற்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.மனித மனங்களில் அவநம்பிக்கை(யாரையும், எப்போதும், எதற்காகவும் நம்பாத மனோபாவம்),காம நோக்கிலோ அல்லது லாப நோக்கிலோ ஒருவரை ஒருவர்  அணுகுவது;எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் இருப்பவர்களை துன்புறுத்துவது அல்லது அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு தனது சுயலாபங்களை மட்டுமே கணக்கிட்டு பிறரிடம் பழகுவது என்று மானுட வாழ்க்கை இருந்து வருகிறது.கலியுகம் செல்லச் செல்ல அன்பு,விட்டுக்கொடுத்தல்,பரிந்து பேசுதல்,இரக்கம்,எல்லோருக்கும் உதவுதல்,பொறுமை,தியாகம்,தானே தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்,தெய்வ நம்பிக்கை,குரு நம்பிக்கை போன்ற நற்குணங்கள் அருகிப் போய்விடும்;

இந்த சூழ்நிலையில்,நாம் வாழ்ந்து வரும் கர்மபூமியானது இது வரையிலும் ஆறு முறை அழிவினை சந்தித்திருக்கிறது.முதல் முறை அழிவினை சந்தித்தப் பின்னர்,மீண்டும் இந்த பூமி உருவான போது நவக்கிரக அதிபதிகளான சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது = இவர்கள் அனைவரும் காலத்தை இயக்கிவரும் சிவ அவதாரமான பைரவப் பெருமானிடம் ஒன்றாகச் சென்று முறையிட்டன.
பூமியில் வாழ்ந்து வரும் மனிதர்கள் தம்மை வழிபடுவதில்லை;அவ்வாறு வழிபட்டால் தான் அவர்களின் கர்மவினைக்கேற்ப தர வேண்டியபலன்களை வழிபாட்டுக்கேற்றவாறு அதிகரித்தோ,குறைத்தோ தர முடியும் என்று வேண்டின;

அவர்களின் கோரிக்கையை ஏற்ற காலபைரவப் பெருமான் தன் மீது அர்ச்சிக்கப்பட்ட  செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து மலர்களை நவக்கிரகங்களின் மீது  தூவி ஆசி வழங்கினார்.அந்த கணத்தில் இருந்து பூமியில் பஞ்சாங்கமும்,பஞ்சாங்கத்தின் மூலமாக ஜோதிடக்கலையும் தோன்றியது.ஜோதிடக்கலையால் பரிகாரமும் உருவானது;
நீங்கள் அனைவரும் காவிரிக்கரையோரம் லிங்கப் பிரதிஷ்டை செய்து வாருங்கள்;தகுந்த காலம் வந்ததும்,உங்களை மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வழிபட வருவார்கள்;

என்று அருளுரை வழங்கினார்;நவக்கிரகங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பூமியில் நமது பாரத தேசத்திற்கு வந்தன;தமிழ்நாட்டில் காவிரிக்கரையோரம் அவை சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தன.

சூரிய பகவான் இன்றைய சூரியனார் கோவில் என்ற இடத்திலும்
சந்திரன் இன்றைய திங்களூர் என்ற இடத்திலும்
செவ்வாய் இன்றைய வைத்தீஸ்வரன் கோவில் என்ற இடத்திலும்
புதன் இன்றைய திருவெண்காடு என்ற இடத்திலும்
குருபகவான் வியாழசோமேஸ்வரர்(கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்குஅருகில்) என்ற இடத்திலும்
சுக்கிரபகவான் இன்றைய கஞ்சனூரிலும்
சனி பகவான் இன்றைய திருநள்ளாறு என்ற இடத்திலும்
ராகு பகவான் இன்றைய திருநாகேஸ்வரம் என்ற இடத்திலும்
கேது பகவான் இன்றைய கீழப்பெரும் பள்ளம் என்ற இடத்திலும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தன.அவை காலப்போக்கில் நவக்கிரக ஸ்தலங்களாக நம்மால் நம்பப்பட்டு பரிகாரத்திற்குரிய கோவில்களாக ஏற்கப்பட்டன.

எந்தக் கிரகத்தினால் நாம் சிரமப்படுகிறோமோ,அந்த நாளில் நாம் பைரவப் பெருமானை வழிபட்டால் அந்தக் கிரகத்தினால் ஏற்படும் துயரங்கள் நீங்கும்.இந்தக் கருத்தின் அடிப்படையில் அடுத்து ஏராளமான பதிவுகள் வெளிவர இருக்கின்றன.

இந்த தெய்வீக ரகசியத்தை நமக்காக வெளிப்படுத்தியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஆவார்.அவருக்கு நாம் கூகுள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment